முத்துக்குமார் இறுதிச் சடங்கு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
மேலும் புதிய படங்கள்
சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது.
முத்துக்குமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் பகுதியே மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த இளைஞர்கள், வக்கீல்கள், மருத்துவ மாணவர்கள், சட்ட மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொண்டர்களால் அந்தப் பகுதியே மக்கள் மயமாக காணப்பட்டது.
அன்னை சத்தியா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள கொளத்தூர் நாடார் சங்க அலுவலகம் அருகே முத்துக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
முத்துக்குமார் உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்டு தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் கட்சி தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், முத்துக்குமார் தந்தைக்கு நல்லகண்ணு ஆறுதல் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி எம்.பி., வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் மகேந்திரன், திராவிடர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆஸ்டின், நெல்லை அமுதன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. அகில இந்திய பொதுச்செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கவிஞர் காசி முத்துமாணிக்கம். தே.மு.தி.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி தலைவர் மணியரசன், பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஷரவண சுப்பையா, அமீர், சேரன், வி.சி. குகநாதன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேல், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சத்யராஜும், வடிவேலுவும் முத்துக்குமாரின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். சத்யராஜ் பேசுகையில், என்னால் பேச முடியவில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவோம் என்று குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது, அவர்கள் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். வீரவணக்கம், வீரவணக்கம், முத்துகுமாருக்கு வீரவணக்கம் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், மாணவர் அமைப்பினை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஊர்வலம் வந்தும், கறுப்பு சட்டை அணிந்தும் மலர் வளையம் வைத்தனர்.
கடைகள் அடைப்பு
முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொளத்தூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாணவர்களும், பெரும் திரளான இளைஞர்களும், பிறரும், முத்துக்குமாரின் லட்சியம் ஈடேறும் வரை உடலை தகனம் செய்ய விட மாட்டோம். முடிந்தவரை போராடுவோம் என கூறி இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தினர்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால் நேற்று மாலை இறுதிச் சடங்குகளை நடத்த முடியவில்லை.
மாலையில் புரசைவாக்கம், ஓட்டேரி ஆகிய பகுதிகளிலும் இறுதி ஊர்வலம் வரும் என்று கருதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கொளத்தூரில் நேற்று பஸ் போக்குவரத்தும் நடைபெறவில்லை.
கொளத்தூர் சுற்றுவட்டார நாடார் முன்னேற்ற சங்கம், நாடார் நல சங்கம், பூம்புகார் வட்டார வியாபாரிகள் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் சார்பில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் என்று படத்துடன் ஏராளமான சுவரொட்டிகள் கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
முத்துக்குமார் உடல் வைத்திருக்கும் இடத்தின் அருகே உள்ள கொளத்தூர் மெயின் ரோட்டில் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து தடைப்பட்டதால், கொளத்தூரில் உள்ள சில பள்ளிகளில் வழக்கத்தை விட முன்னதாக வகுப்புகளை முடித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு சென்று வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
கடை அடைப்பின் காரணமாக முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பலர் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர், இலவச தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
திமுக எம்.எல்.ஏ. மீது கல்வீச்சு
வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் நேற்று பிற்பகல் முத்துக்குமார் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தி வெளியே வந்த போது, அங்கிருந்த சிலர் வி.எஸ்.பாபு மீது கற்களை வீசினர். உடனே போலீசாரும், தி.மு.க. தொண்டர்களும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சில தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர். அவற்றை எரிக்கவிடாமல் தடுத்த போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசை வாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக் கொத்தளத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது.
தமிழகம் முழுவதிலுமிருந்து திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் ஊர்வலப் பாதை நெடுகிலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெருமளவில மக்கள் அணிவகுத்து வந்ததால் மிக மிக மெதுவாக இறுதி ஊர்வலம் நகர்ந்தது.
மூலக்கொத்தளத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இறுதி ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Labels:
NEWS
Post a Comment