கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் தந்தால் புரவலர் பட்டம் - 20 ஆண்டு தரிசனம் இலவசம்!!
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவில்களின் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் தருவோருக்கு திருக்கோவில் புரவலர் என்ற பட்டம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு 20 ஆண்டுகள் இலவச தரிசனத்திற்கும் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக கலாசாரத்தின் கருவூலங்களாகத் திகழும், பழமையும், தொன்மையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க கோவில்களை அதன் சிறப்புகள் மாறாமல் புதுப்பித்து வருங்கால தலைமுறையினருக்கு உரிமையாக்குவது இன்றியமையாத கடமை.
பழமையான, தொன்மையான இந்த கோவில் கலைக்களஞ்சியங்கள் நிதி வசதியின்மையால் பராமரிக்க இயலாமல், பழுதுபட்டு அழிந்து விடக் கூடாது என்ற கருணையின்பாலும், கடமையின்பாலும் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான இந்த அரசு, சமயநாட்டமிக்கார் பலரையும் கோவில்களின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்யும் உயரிய நோக்கில் திருப்பணி மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் நன்கொடையாளருக்கு `திருக்கோவில் புரவலர்' விருதினை இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கி கவுரவிக்கும் உன்னத திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.
இதன்படி, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 38 ஆயிரம் கோவில்களில் போதிய நிதி வசதியின்மையால் புதுப்பிக்க இயலாமல் உள்ள பழமையான கோவில்களை சீரமைத்திட ஏற்படுத்தப்பட்ட `இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி நிதிக்கு' ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கும் நன்கொடையாளருக்கு `திருக்கோவில் புரவலர்' என்ற விருது வழங்கப்படும். நன்கொடையாளரின் புகைப்படம் பொருத்தப்பட்ட தங்க நிற அட்டை ஒன்றும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலுக்கும் குடும்பத்தினருடன் (5 நபர்களுக்கு மேற்படாமல்) சென்று கட்டணம் ஏதுமின்றி சிறப்பு தரிசனம் செய்யலாம். இந்த தங்க நிற அட்டை 20 ஆண்டுகளுக்கு செல்லும்.
இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் ஜுன் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகிக்கிறார்
இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். கோவில்களில் திருப்பணி செய்து வரலாற்றில் இடம் பெறலாம்.
மேலும் விவரம் அறிய,
ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119-உத்தமர் காந்தி சாலை, சென்னை-34.
தொலைபேசி எண்: 044- 28334811 -12- 13.
இந்த முகவரி அல்லது தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
மேலும், திருக்கோவில் செயல் அலுவலர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டும் முழு விவரங்களை அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
NEWS
Post a Comment