சென்னை: இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment