கடும் பனிப்பொழிவையும் கண்டுகொள்ளாமல், குடும்பம் குடும்பமாக தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஓஸ்லோவில் உள்ள புகழ்பெற்ற யங்ஸ்டர்கட் பகுதியிலிருந்து பேரணி கிளம்பி நார்வே நாடாளுமன்றத்தில் முடிவடைந்தது. அங்கு மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
நார்வே நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஒஸ்லோ நகரசபை உறுப்பினருமான துரன்ட் ஜென்ஸ்ரூட், நார்வேஜிய தொழிற்சங்க ஒஸ்லோ பிரதேச துணைத்தலைவர் ஆர்ண ஹாலோஸ் மற்றும் செங்கட்சியைச் சேர்ந்த விஜொணார் மொக்ஸ்னஸ் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிப்பதாகத் தெரிவித்த வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், பொதுமக்களின் உயிர்ப்பலிகள் நிறுத்தப்படுவதே இன்றையை அவசர தேவை. உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் நாடுகளுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால், வலது சாரிக்கட்சி தலைவர் அர்ணா சூல்பர்க் மூலம் நார்வே அரசாங்கத்திற்கு கோரிக்கை மனுவொன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், சிறிலங்காவினால் நிகழ்த்தப்படும் பெருளவிலான மனிதப் பேரவலத்திற்கு உலகம் சாட்சியமாக விளங்குகின்றது. தினசரி பல உயிர்கள் படுகொலை செய்யப்படுகின்றன.
நார்வே மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய இணைத்தலைமை நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், போரை நிறுத்தி, விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்த முடியும்.
ஆனால், அதற்கு மாறாக விடுதலைப் புலிகள் ஆயுங்களை கைவிட வேண்டும் எனும் அறிக்கையினை நேற்று முன்தினம் நார்வே மற்றும் இணைத்தலைமை நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பு தமிழ் மக்களாகிய எமக்கு கடும் கோபத்தையும் பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரச பயங்கரவாத்திற்கும் தமிழின அழிப்பிற்கும் எதிரான இறுதி வழியாகவே தமிழீழ மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.
தமிழ் மக்களின் இருப்பிற்கும், உரிமைகளுக்கும் உறுதியளிக்கப்படாத, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் கருத்திலெடுக்கப்படாத நிலையில், தமிழ்த் தேசிய இனத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பிடம் ஆயுதங்களைக் கைவிடுமாறு கோருவது என்பது, எமது மக்கள் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதத்தையும் இன அழிப்பினையும் ஆதரிப்பதான செயலாகும்.
இந்த நிலைப்பாடு ஒருபோதும் நீதியான நிரந்தரமான சமாதானத்திற்கு இட்டுச்செல்லாது.
சிறிலங்கா தேசம் பிரிட்டிஷ் காலணி ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 61 ஆவது சுதந்திர நாளை கொண்டாடியது.
1948ம் ஆண்டு தமிழ் தேசிய இனத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த சிங்கள பெரும்பான்மை இனத்தின் கைகளில் கையளித்தது பிரிட்டன்.
இலங்கைத்தீவின் இன்றைய இன முரண்பாட்டிற்கு அடித்தளம் பிரிட்டனால் இடப்பட்டதாகும். எனவே, சிறிலங்காவின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள், தமிழர்களுக்கு 61 ஆண்டுகால அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாளாகும்.
ஆயிரமாயிரமாக இங்கு திரண்டுள்ள நார்வே தமிழ் மக்களாகிய நாம், விடுதலைப் புலிகளுக்கான எமது ஆதரவினை வெளிப்படுத்துவதோடு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையையும் வலியுறுத்தி நிற்கின்றோம் என்று மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இதேபோல நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
இலங்கையின் 61வது சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அவர்கள் அனுசரித்தனர்.
பெருமளவில் தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் ஜெனீவா நகரமே ஸ்தம்பித்துப் போனது.
அழிவிலும் எழுவோம் என்ற பெயருடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும் திரளானோர் இளைஞர்கள் ஆவர்.
ஐ.நா. அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து நடந்த இந்தப் போராட்டடம் அக்கம் பக்கத்தில் உள்ள தெருக்களிலும் தமிழர்களால் நிரம்பியிருந்தது. இதனால் ஜெனீவாவில் இயல்பு நிலை பல மணி நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது.
பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி நடத்திய இந்தப் போராட்டம் சுவிட்சர்லாந்து நாட்டு ஊடகங்களில் பிரதான செய்தியாக மாறியது.
பாரீஸில் 30,000 பேர் ஆர்ப்பாட்டம்
இதேபோல பாரீஸில் உள்ள அமைதிச் சுவர் என்ற இடத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கூடி மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
தென்னாப்பிரிக்காவில் ...
தென்னாப்பிரிக்காவிலும், தென்னாபிரிக்க நீதி, சமாதானத்திகான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன.
தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment