ஐ.நா: இலங்கையில் தமிழினப் படுகொலை உக்கிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஐ.நா. சிறப்புத் தூதர் விரைகிறார். பொதுச் செயலாளர் பான் கி மூன் அவரை அனுப்பி வைக்கிறார்.
முல்லைத்தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது கொத்து வெடிகுண்டுகளையும், பாஸ்பரஸ் வெடிகுண்டுகளையும் வீசி கூட்டம் கூட்டமாக தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
போரை நிறுத்துங்கள் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரியும் கூட இலங்கை அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இந்திய அரசும் சத்தம் போடாமல் இருக்கிறது.
இந்த நிலையில் முல்லைத்தீவு வனப்பகுதியில் சிக்கியுள்ள இரண்டரை லட்சம் தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
யாரெல்லாம் பாதுகாப்பு பகுதி என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகிறார்களோ அவர்களை கூட்டம் கூட்டமாக இலங்கைப் படைகள் கொன்று குவித்து வருகின்றன. இதனால் அரசுப் பகுதிக்கு வர தமிழர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் கண்மூடித்தனமாக தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கை படைகள்.
புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது அடுத்தடுத்து 4 முறை குண்டுகள் வீசப்பட்டதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் பலியானார்கள். இந்த குண்டு வீச்சை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே நியாயப்படுத்தியுள்ளார். அது ஒரு தாக்குதல் இலக்கு என மிருகத்தனமாக கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், இலங்கை பிரச்சினையில் தலையிட்டு அப்பாவி தமிழர்களை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.
இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமைகளை கண்டறிவதற்காக தனது சிறப்பு பிரதிநிதியை உடனடியாக கொழும்புக்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
ஐ.நா. சபையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான எரித்ரியாவைச் சேர்ந்த ராம்சரட் சாமுவேல் என்பவரை தனது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்ப பான் கீ மூன் தீர்மானித்துள்ளார்.
ராம்சரட் சாமுவேல் ஐ.நா. சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான அரசியல் விவகார பிரிவின் பொறுப்பாளராக இவர் செயல்பட்டு வருகிறார்.
கொழும்பு செல்லும் ராம்சரட் சாமுவேல் அங்கு முக்கிய அதிகாரிகளையும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை விசாரித்து அறிந்து கொள்கிறார். கொழும்பில் உள்ள ஐ.நா. சபை அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்துகிறார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் அவர் நேரில் சென்று தற்போதைய நிலைமைகளை பார்வையிடுகிறார்.
அறிக்கை தாக்கல்
இலங்கை சுற்றுப்பயணம் முடிந்ததும் அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயாரித்து ஐ.நா. பொது செயலாளரிடம் தாக்கல் செய்கிறார். அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment