ஓவர் டோஸ் மருந்தால்தான் ஜாக்சன் மரணமடைந்தார் - அறிக்கை
லாஸ் ஏஞ்சலெஸ்: வலி நிவாரணியான டெமரால் மற்றும் ஹெராயின் கலந்த மெத்தடான் ஆகிய மருந்துகளை அதிக அளவில் கலந்து சாப்பிட்டு வந்ததே, பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.ஜாக்சன் திடீரென மரணமடைந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது ரசிகர்கள் பெரும் சோகமடைந்தனர். இந்த நிலையில் ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின
அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது உடலில் மொத்தம் 2 முறை போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. தனது மகன் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக திடீரென கூறிய தந்தை ஜோசப், 3வது போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் அதை குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில், ஜாக்சன் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த குழுவின் முதல் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், யாருக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான அபாயகரமான மருந்துகளை ஜாக்சன் சாப்பிட்டுள்ளார். இதுவே அவருக்கு எமனாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வலி நிவாரணியான டெமரால் மற்றும் ஹெராயின் கலந்த மெத்தடான் ஆகியவற்றை நீண்ட காலமாக அவர் எடுத்து வந்துள்ளார். இதனால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது உடல் அதைத் தாங்க முடியாமல் இறந்திருக்கிறார்.
மேலும், இந்த மருந்துகளை அவருக்குக் கொடுத்ததற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கும் தொடர் முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
ஜாக்சனின் உடலில், டெமரால், மெத்தடான், ஜனாக்ஸ் என்கிற பதட்டத்தைத் தணிக்க உதவும் மருந்து ஆகியவை அபாயகர அளவைத் தாண்டி இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், மிக மிக ஆபத்தான மயக்க மருந்தான புரபபால் மருந்தும் அவரது ரத்தத்தில் கலந்திருக்கிறது. இதை தினசரி இரவு நேரத்தில் தூங்குவதற்காக பயன்படுத்தி வந்துள்ளார் ஜாக்சன்.
மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் வலி தெரியாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டைலாடிட் என்ற மருந்தும் ஜாக்சன் ரத்தத்தில் இருந்திருக்கிறது.
மொத்தத்தில் உயிரைக் குடிக்கக் கூடிய மருந்துகள் அத்தனையும் அவரது உடலில் இருந்திருக்கிறது. இதுவே ஜாக்சனின் மரணத்திற்குக் காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment