லண்டன்: சொத்துக்களை அடைவதற்காக மைக்கேல் ஜாக்சனைக் கொன்று விட்டனர் என்று அவரது சகோதரி லா டோயா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இது மைக்கேல் ஜாக்சனின் மரணச் சர்ச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாக்சன் உயிருடன் இருப்பதை விட இறந்தால் நமக்கு அதிக லாபம் என்று எண்ணி அவரைக் கொன்றுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்லார்.
ஜாக்சன் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் தாங்கள் விசாரித்து வருவதாக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் கூறி 2 நாட்கள் கழிந்த நிலையில், லா டோயா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லா டோயா கூறுகையில், மைக்கேல் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது 1 பில்லியன் பவுண்டு சொத்துக்களை அடைவதற்காக கொன்றுள்ளனர்.
மருந்து அதிகம் சாப்பிட்டதால் அவர் இறந்தார் என்பதெல்லாம் பொய்.
இந்தக் கொலையில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருக்க முடியாது என்று கருதுகிறோம். இது ஒரு கும்பலின் மிகப் பெரிய சதியாக இருக்கக் கூடும். எல்லாமே பணத்திற்காக நடந்துள்ளது.
அவரது இசைத் தொகுப்புகள் மூலம் வரும் பணத்திற்காக இந்தக் கொலையை செய்துள்ளதாக கருதுகிறேன். ஜாக்சன் உயிருடன் இருப்பதை விட இறந்தால் அதிக லாபம் என்று எண்ணியோர் இதை செய்திருக்க வேண்டும்.
மைக்கேலை மயக்க நிலையில் தொடர்ந்து வைத்திருந்திருக்கின்றனர். தங்களது கட்டுப்பாட்டுக்குள் அவரை கொண்டு வந்துள்ளனர். இதற்காக தொடர்ந்து அவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.
அவரது கழுத்தைச் சுற்றிலும் ஏராளமான ஊசிகள் போடப்பட்ட அடையாளம் காணப்பட்டது. கைகளிலும், ஏகப்பட்ட ஊசி அடையாளங்கள் இருந்தன. இவற்றையெல்லாம் யார் போட்டது என்பது விரைவில் தெரிய வரும்.
ஆனால் நிச்சயம் இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. எனது தம்பியைக் கொன்றுள்ளனர் என்ற எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
இந்த சதியாளர்கள், தனது குடும்பத்தினருடன் மைக்கேலை சேர விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். மைக்கேலின் உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் லண்டனில் 50 ஷோக்களை நடத்துமாறு மைக்கேலை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
உண்மையில் மைக்கேல் இந்த ஷோக்களில் பங்கேற்க விரும்பவில்லை. 10 ஷோக்கள் மட்டுமே நடத்த அவர் விரும்பினார். ஆனால் அவரை நிர்பந்தித்துள்ளனர்.
எனது தந்தையை அதிக கஷ்டப்படுத்தி வேலை வாங்கினார்கள் என்று மைக்கேலின் மகள் பாரீஸே கூறியுள்ளாள்.
இசையிலிருந்து விடுபட்டு திரைப்பட இயக்குநராகும் யோசனையில் இருந்து வந்தார் மைக்கேல். திரில்லர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கும் யோசனையிலும் இருந்தார். அதற்கான போஸ்டரைக் கூட அவர் தயார் செய்து வைத்திருந்தார்.
ஆனால் இவை எல்லாவற்றையும் அந்த சதிகாரக் கும்பல் தடுத்து விட்டது. உலகிலேயே தனிமையான மனிதனாக எனது தம்பியை மாற்றி வைத்திருந்தது.
எனது தம்பி வீட்டில் எப்போதும் பணம் வைத்திருப்பார். குறைந்தது 2 மில்லியன் டாலர் பணமாவது இருக்கும், நகைகளும் இருக்கும். ஆனால் மைக்கேல் இறந்த செய்தி அறிந்து நான் வீட்டுக்குச் சென்றபோது அங்கு எந்தப் பணமும் இல்லை, நகைகளும் இல்லை.
எனக்கு முன்பாக அங்கு வந்தவர்கள் அதை எடுத்து் சென்று விட்டனர் என்று கூறியுள்ளார் லா டோயா.
ஏற்கனவே தனது மகனைக் கொன்று விட்டதாக மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோசப்பும் சந்தேகம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment