முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திராபுரத்தில், வான்படையினரின் உதவியுடன் தரைப்படையினர் நடத்திய தாக்குதலில் 72 தமிழர்கள் உயிரிழந்தனர்.
சுதந்திராபுரத்திலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் நேற்று இடம் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தபோது விமானப்படையினரின் உதவியுடன் இங்கு தரைப்படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல் மாலை 3 மணி வரை தொடர்ந்துள்ளது.
மக்கள் கூட்டம் போய்க் கொண்டிருப்பதை விமானப்படையினர் பார்த்து ராணுவத்திற்குக் கூறியதைத் தொடர்ந்து, வேண்டும் என்றே அப்பாவிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களையும், காயம்பட்டவர்களையும் மீட்டுக் கொண்டு வர முடியாத அளவுக்கு அங்கு நிலைமை சரியில்லை.
தாக்குதல் நடந்து முடிந்த பிறகே காயம் பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
வன்னிப் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும், ராணுவம் ஏற்கனவே தகர்த்து விட்டதால், காயமடைந்தவர்களை எங்கும் கொண்டு செல்ல முடியாத அவல நிலை.
இதனால் மரங்களுக்குக் கீழும், பாய்களை விரித்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
இதுவரை 72 பேர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Post a Comment