லண்டன்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (SLBC) மூலமான தனது எப்.எம். ஒலிபரப்பை பிபிசி உலக சேவை (BBC World Service) ரேடியோ இன்று முதல் நிறுத்துகிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் மூலம் இந்த ஒலிபரப்பை பிபிசி நடத்தி வந்தது. ஆனால், இந்த ஒலிபரப்பில் இலங்கை வானொலி நிறுவனம் தொடர்ந்து தேவையில்லாத தலையீடுகளை செய்ததால், அவர்கள் மூலமான தனது சேவையை பிபிசி நிறுத்துவதாக அறிவித்துவிட்டது.
ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் இலங்கை மக்களுக்காக பிபிசி உருவாக்கி வழங்கிய செய்திகளை இலங்கை வானொலி நிறுவனம் ஒலிபரப்பாமல் நிறுத்தி வைத்தது.
கடந்த நவம்பர் 27 முதல் ஜனவரி மாதம் வரை தமிழ் செய்திகளை 17 முறையும், சிங்கள செய்திகளை 8 முறையும் இலங்கை ஒலிபரப்பவில்லை. சில நேரங்களில் பிபிசியின் current affairs நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாகவே இலங்கை வானொலி ஒலிபரப்பாமல் விட்டுவிட்டது.
இது குறித்த தனது வருத்தத்தை இலங்கை வானொலியின் தலைவர் ஹட்சன் சமரசிங்கேவை பிபிசி பிரநிதிகள் நேரடியாக சந்தித்தும், கடிதங்கள் மூலமும் தெரிவித்தும் கூட பலனில்லை.
இது போன்ற இடையூறுகள், தடைகள் ஆகியவை மூலம் பிபிசியின் செய்திக் கொள்கைகள் விட்டுக் கொடுக்கப்படுவதாகவும், இது இரு தரப்பும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கடிதங்களிலும் நேரடி சந்திப்புகளிலும் பிபிசி எடுத்துரைத்தது எச்சரித்தது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளுக்குப் பின்னர் கடந்த வாரத்தில் பிபிசி நிகழ்ச்சிகளை முடக்குவதை இலங்கை வானொலி அதிகப்படுத்தியது. கடந்த 10 நாட்களில் மட்டும் பிபிசி தமிழ் செய்திகளை 3 முறையும், சிங்கள செய்திகளை ஒரு முறையும், ஆங்கில செய்திகளை 2 முறையும் இடையூறு செய்தது.
இது குறித்து பிபிசி உலக சேவையின் இயக்குனர் நிகேல் சேப்மேன் கூறுகையில், பிபிசியின் ஆங்கில, சிங்கள, தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனம் முடக்கி வருவது எரிச்சலூட்டுகிறது. இதை சுட்டிக் காட்டிய பின்னர் மேலும் அதிகமான இடையூறுகள் தரப்படுவது அதைவிட வருந்தத்தக்கது.
இதனால் எங்களது நிகழ்ச்சிகளை இடையூறு இல்லாமல் ஒலிபரப்புவோம் என இலங்கை வானொலி உத்தரவாதம் தரும் வரை இந்த ஒலிபரப்பை நிறுத்தி வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
செய்திகளை நேர்மையாகவும், நடுநிலையோடும் தருவதற்காக பிபிசி சில கொள்கைகளை வகுத்துள்ளது. அதில் ஒருதலை சார்பின்மை, செய்தி சுதந்திரம், எந்த ஒரு பிரச்சனையிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்டு செய்தி வழங்குவது ஆகியவை முககியமானவை. இதன்மூலம் தான் எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ள நேயர்களையும், உலகின் மிக நம்பகமான செய்தி ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயரையும் எங்களால் காப்பாற்ற முடியும்.
இலங்கை வானொலியுடன் 1998ம் ஆண்டு முதலே பிபிசிக்கு மிக நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வந்தது. 1940கள் முதலே பிபிசியை இலங்கை மக்கள் கேட்டு, நேசித்து வருகின்றனர். இந்த ஒத்துழைப்பும் நட்புறவும் தொடரவே பிபிசி விரும்புகிறது. இதற்கு ஒலிபரப்பில் இடையூறுகள் செய்வதை இலங்கை வானொலி நிறுத்தியாக வேண்டும். இதை அவர்கள் செய்யாவிட்டால் இந்த நட்புறவை எங்களால் தொடர முடியாது.
இது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயார். அதே போல பிபிசியின் செய்திகள் குறித்து இலங்கை வானொலிக்கு ஏதாவது புகார்கள் இருந்தால் இது குறித்து விசாரணை நடத்தவும் தயார். ஆனால், இதுவரை அப்படி குறிப்பான புகார் எதையும் இலங்கை வானொலி சொல்லவில்லை என்றார் நிகேல் சேப்மேன்.
இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து இந்த நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.
இந்த சேவைகளை bbctamil.com, bbc.com/news, bbcsinhala.com ஆகிய இணையத் தளங்கள் மூலம் நேயர்கள் கேட்கலாம்.
Post a Comment