இலங்கை: அதிமுக நிலையால் ஆத்திரம் - கட்சி கரை வேட்டியை கொளுத்திய தொண்டர்
தூத்துக்குடி: இலங்கை பிரச்சினையில் தனது கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கொதித்த அதிமுக தொண்டர் ஒருவர் தனது கரைவேட்டியை தீ வைத்து கொளுத்தினார்.தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அதிமுக தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். மாலை சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இலங்கை தமிழர் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அதிமுக கட்சி கரை வேட்டியை அவிழ்த்து வீசினார்.
பின்னர் வேட்டியின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இலங்கையில் தமிழர் தாக்கப்படும் சம்பவத்தில் தமது கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கதறியபடியே கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விரைந்து சென்று சக்திவேல், அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்.
Post a Comment