Latest Movie :

இஸ்ரேல் பாணியில் இலங்கை பயன்படுத்தும் பாஸ்பரஸ் எரிகுண்டுகள்

கொழும்பு: வன்னிப் பகுதியில் தமிழ் மக்கள் மீது கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெள்ளை பாஸ்பரஸ் எரிகுண்டுகளை இலங்கைப் படைகள் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக தமிழர்களை அழித்து வருவதாக கூறப்படுகிறது. காஸா நகர் மீது இப்படிப்பட்ட எரிகுண்டுகளைத்தான் இஸ்ரேல் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் புதிய ரக எரிகுண்டுகளை பீரங்கிகள் மூலம் வீசித் தாக்குகின்றனர்.

இந்த எரிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடங்களில் - மனித உடல்களும், கட்டடங்களும், மரங்களும் கூட தீப்பற்றி எரிவதுடன் அதிக அளவில் சேதங்களும் ஏற்படுகின்றன.

இலங்கைப் படையினர் வெள்ளை பாஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதி உயர் வெடிமருந்து கொண்ட எரிகணைகளை பீரங்கிகள் மூலம் ஏவுவதாக கூறப்படுகிறது.

பெருமளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் இந்த வகை குண்டுகளை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் இலங்கைப் படைகள் தற்போது அவற்றை தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

1980ம் ஆண்டு உருவான ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் இப்படிப்பட்ட கொடூர ஆயுதங்களை மக்கள் வாழும் பகுதிகளில் பயன்படுத்த தடையும் உள்ளது.

மேலும், இந்த வகை ஆயுதங்களை ரசாயன ஆயுதங்களின் பட்டியலி்ல் அமெரிக்கா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை பாஸ்பரஸ் எரிகணைகள் வெடிக்கும் போது அதிக புகை மண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. அப்போது ஏற்படும் சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் ரசாயனப் பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டதாகும்.

வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிக அளவில் இருக்கும் வரையிலும் பாஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் தன்மை கொண்டவையாகும்.

முன்பு, வியட்நாம் போரின் போது அமெரிக்கா ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த வகை எரிகணைகளைத்தான் சமீபத்தில் காஸா நகரை அழித்தொழிக்கும் கொடூரச் செயலில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவமும் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

58 தமிழர்கள் பலி

இத்தகைய தாக்குதலில் நேற்று மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கைப் படைகள் இந்த வகை எரிகணைகளைப் பயன்படுத்தி கொடூரத் தாக்குதலைப் புரிந்துள்ளன.

அங்கு மீட்புப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை 55 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சுதந்திரபுரத்தின் இன்னொரு பகுதியில் நடந்த தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்ப்டனர். 39 பேர் காயமடைந்தனர்.

புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது நேற்று காலை நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

தற்கொலைப் படைத் தாக்குதல்

இதற்கிடையே, கேப்பாபுலவு என்ற இடத்தில் இலங்கைப் படையினரின் நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இரண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவை (கரும்புலிகள்) சேர்ந்த தாக்குதல் நடத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய குயில்வண்ணன் என்கிற சிவலிங்கம் சிவராஜா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகளும் இதில் உயிரிழந்தனர்.

இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger