Latest Movie :

மைக்கேல் ஜாக்ஸன்... சாதனைகளும் வீழ்ச்சியும்!


மைக்கேல் ஜாக்ஸன் இசையுலகில் அடியெடுத்து வைத்த போது நிறவெறி தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது எங்கும். ஆனால் அந்த நிறவெறியை மிஞ்சும் அபார இசைஞானம் ஜாக்ஸனுக்கு இருந்தது.

அவரது வாழ்க்கை முழுக்க முழுக்க நம்ப முடியாத ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது.

மிக மிக குறைந்த வயதில், அதாவது 5 வயதிலேயே சர்வதேசத் தரத்தில் இசையை உருவாக்கியவர் ஜாக்ஸன்.

தன்னுடைய 4 சகோதரர்களோடு சேர்ந்து 'ஜாக்சன் 5' இசைக் குழுவை துவக்கினார். மைக்கேல் ஜாக்சனின் தந்தை பெயர் ஜோ ஜாக்சன். அவருடைய தாய் கேத்ரின். எஃகு நிறுவனம் ஒன்றில் தொழிலாளராக பணியாற்றிய ஜாக்சனின் தந்தை இளம் வயதிலேயே தன்னுடைய மகனின் இசை ஆற்றலை உணர்ந்து ஊக்குவித்தார்.

ஜாக்சனின் குரல் வளமே அவரது இசைக் குழுவை பிரபலமாக்கியது. வாய்ப்புகள் அந்த குழுவை தேடி வந்தன.
உள்ளூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த சகோதரர்கள் பின்னர் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற தொடங்கினர். பாடகராகவும், நடனக் கலைஞராகவும் விளங்கிய சிறுவன் ஜாக்சனின் வசீகரம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது.

கனவிலும் நினைக்க முடியாத புகழ்...

10 வயதில் ஆல்பத்திற்கான இசை ஒப்பந்தம் அவரை தேடி வந்தது. அதன் பிறகு அவருடைய இசைக்குழு மேலும் புகழ் பெற்றது.

இசையுலகின் போக்கையே மைக்கேல் ஜாக்சன் மாற்றி அமைத்தார் என்றால் மிகையல்ல. வெள்ளையரின் இசைக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர் தனிப்பாடகராக அறிமுகமாகி புகழ் பெற்றார். இதன் மூலம் பரவலான அளவில் புகழ் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பாடகராக அவர் உயர்ந்தார்.

ஜாக்சன் பாடிய தனிப் பாடல்கள் புகழ் பெற்றதோடு, அவற்றோடு இணைந்த அவரது நடனமும் ரசிகர்களை கவர்ந்தது.

பீட் இட், பில்லி ஜீன் போன்ற தனிப் பாடல்கள் எங்கும் ஒலிக்க தொடங்கின. ஜாக்சன் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில்தான் எம் டிவி அறிமுகமானது. மைக்கேல் ஜாக்ஸனைப் பயன்படுத்தி எம்டிவி பெரும்புகழ் பெற்றது. அதேபோல ஜாக்ஸனுக்கும் பெரும் உதவியாக அமைந்தது எம்டிவி.

இதன் மூலம் மைக்கேல் ஜாக்சன் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினர். எம் டிவி மூலம் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆனார். 1982ல் வெளியான திரில்லர் ஆல்பம் இசையுலகில் அவரை முடிசூடா மன்னனாக்கியது.

1984ல் எட்டு கிராமிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. அவர் பாடிய ஒவ்வொரு தனிப் பாடலும் புகழ் பெற்றன. இதன் காரணமாக இசையுலகம் ஆல்பத்தை தயாரித்து சந்தைப்படுத்திய விதமே மாற்றம் அடைந்தது. பாப் இசையின் ஒரே அத்தாரிட்டி எனும் அளவுக்கு மைக்கேல் ஜாக்சன் உயர்ந்தார்.

மைக்கேல் ஜாக்சனை பின்பற்றி நூற்றுக்கணக்கான பாப் பாடகர்கள் உருவானார்கள். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்தியாவில் முழு அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரே மேற்கத்திய இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸன்தான். இங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்ச்சை நாயகன்...

1984-ம் ஆண்டுக்குப் பின் அவரது இசையுலகப் பயணம் சர்ச்சைகளும் வழக்குகளும் நிறைந்ததாக மாறியது.

1984 ஆம் ஆண்டு பெப்சி விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் அனுதாபத்தைப் பெற்றுத் தந்த நிகழ்வு இது.

இதனால் அவருக்கு நஷ்டஈடாக 1.5 கோடி டாலர்களைக் கொடுத்தது பெப்சி. இந்தத் தொகையை நன்கொடையாக வாரி வழங்கி உலக மக்கள் மனங்களில் உயர்ந்தார் ஜாக்ஸன்.

ஆனால் அதன்பிறகு அவர் தனது உடலை பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அடிக்கடி தன்னுடைய முகத்தை மாற்றி அமைத்துக் கொண்ட அவர், தன்னுடைய தோலை பிளிச்சிங் செய்து முழுமையான வெள்ளைக்காரரைப் போல தோற்றமளித்தார். தோலின் நிறம் மாறினாலும், அதன் ஆரோக்கியம் கெடத் துவங்கிவிட்டது இந்த ஆபரேஷன்களால்.

பிராண வாயு அறையில் படுத்து உறங்குவதாக சில காலம் தகவல்களைப் பரப்பி விட்டார் ஜாக்ஸன். பின்னர் அவர் மாஸ்க் அணிந்தபடி நிகழ்ச்சிகளுக்கு வந்து போனார்.

சிம்பன்சி குரங்கு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வருவதாகக் கூறினார். 1988ல் வெளியான "மூன்வாக்" சுயசரிதையில் தன்னை பற்றி பல விஷயங்களை ஜாக்சன் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆனால் 1993ம் ஆண்டு 13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக ஜாக்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவரது செல்வாக்கும் பாதிக்கப்பட்டது.
பல ஆண்டு நீடித்தஇந்த வழக்கு காரணமாக ஜாக்சனின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ள ஒரு பெரும் தொகையை நஷ்டஈடாகக் கொடுத்தார். பின்னர் பஹ்ரைன் மன்னரின் 2வது மகன் அவர் மீது வழக்கு தொடுத்தார். வழக்குகளால் ஏற்பட்ட செலவுகளை அடைக்க அவர் பெருமளவில் கடன் பட்டார்.

பின்னாளில் ஜாக்சனைப் பற்றி நல்ல செய்திகளே இல்லை எனும் அளவுக்கு எதிர்மறையான செய்திகளே அதிகம் வெளியாகின.

அள்ளிக் கொடுத்தவர்...

வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர் குறிக்கோளாக இல்லை. தான் சேர்த்த ஏராளமான பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பல அறக்கட்டளைகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் ஜாக்ஸன்.

நீரிழிவு ஆய்வு மற்றும் புற்றுநோய் கழகத்திற்காக அவர் கோடிக்கணக்கான தொகையை நிதியாக திரட்டி தந்தார்.

பெப்சி நிறுவனம் தனக்கு நஷ்டஈடாக அளித்த 1.5 கோடி டாலர்களை அவர் நன்கொடையாகவே வழங்கி விட்டார்.

ஹீல் த வேர்ல்டு அறக்கட்டளை மூலம் உலகால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதற்காகவே நெவர்லாண்டு பண்ணையை வாங்கினார். இந்த பண்ணையின் பரப்பளவு 2500 ஏக்கர்கள். சிறுவர்களுக்காக அதனை சொர்கலோகமாகவே மாற்றினார் ஜாக்ஸன். ஆனால் அவரது இமேஜை பெருமளவு சிதைத்ததும் இந்த நெவர்லாண்டு பண்ணை வாழ்க்கைதான்.

இதனால் ஒரு கட்டத்தில் இந்தப் பண்ணையையே இழுத்து மூடும் அளவுக்குப் போனது.

பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்த ஜாக்ஸனின் இறுதிக் காலம் பெரும் கடனாளியாக அவரை மாற்றியிருந்தது. இறக்கும் தருவாயில் அவருக்கு இருந்த கடன் அளவு 500 மில்லியன் டாலர்கள் என்கின்றன செய்திகள்.

இந்த நாட்களில் அவர் மேடைகளில் ஏறியதை விட கோர்ட் படிகளில் ஏறியதே அதிகம். அவரது நெவர்லாண்டு பண்ணை வீட்டை ஏலத்தில் விடக் கூட ஒரு கட்டத்தில் முயற்சிகள் நடந்தன.

இந்தச் சிக்கலை எல்லாம் சமாளிக்கவே, மீண்டும் இசை நிகழ்ச்சிகளை முழுவீச்சில் நடத்த முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டார் ஜாக்ஸன். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பணம் பெற்று ஓரளவு கடன்களையும் அடைத்தார் ஜாக்ஸன்.

ஜூலை 13-ம் தேதி லண்டனில் 50 மேடை நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல ஐடி ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு லண்டனுக்குப் போய் ஜாக்ஸன் இசை நிகழ்ச்சியைக் காணத் தயாராக இருந்தார்கள்.

அதற்குள் இயற்கை ஜாக்ஸனை தன்னோடு இணைத்துக் கொண்டு, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களை பெரும் துயரில் தள்ளிவிட்டது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger